சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

இந்த மாதம் சனிப் பெயர்ச்சி நிகழப் போவதாகத் தெரிகின்றது. அதனுடைய பலா பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.
சில வாரங்களாக இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நான், இப்போது ஒன்பது மணி வாக்கில் வர ஆரம்பித்து இருக்கிறேன்.
புள்ளி மேலே புள்ளி வைத்து கோலம் போட்டுகொண்டிருந்த சன் டிவியும், கோலங்கள் தொடரில் , தோழர் என்று அன்போடு அழைக்கப்படும் கதாபத்திரத்தை இன்று கோபம் கொள்ளச் செய்து, சபதமிட வைத்து விட்டார்கள். போதாக் குறைக்கு அபியும் இன்று கோபம் கோபமாக பேசினார். கூடிய விரைவில் முடித்து விடுவார்கள் என்றுத் தோன்றுகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக இருக்குமா ? அரசி தொடர் கூட கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது போல் தோன்றுகின்றது.

சிறு வயதில், எனது தாத்தாவிடம் இந்த மாதிரி பெயர்ச்சிகளைப் பற்றிக் கேட்டதுண்டு.
"ஏன் தாத்தா, குருப் பெயர்ச்சி தான் ஆச்சே.. எனக்கு இந்த வாட்டியும் கணக்கு ல சிக்ஸ்டி மார்க்ஸ் மேல வரவில்லையே .. எப்போ தாத்தா நான் ஹன்ட்ரட் அவுட் ஆப் ஹன்ட்ரட் வாங்குவேன் ?"
ஒழுங்க படிப்பான்னு ஓங்கி ஒன்னு கொடுக்காம, " அதுவா, இப்போ வக்கிரச்சிண்டு இருக்கு .. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போய்டும்" என்று என்னை சமாதானப் படுத்துவர் எனதன்புத் தாத்தா.
தினமும் , ராசி பலனில் என்ன போட்டிருக்கின்றது என்று பார்த்து, அன்றைய நிகழ்வை அதனுடன் பொறுத்திப் பார்த்து சரி பார்ப்பது ஒரு பழைய வழக்கம். அதிர்ஷ்டம் என்று போட்டிருந்து, அன்று பேருந்தில் நடத்துனர், பாக்கிச் சில்லறை நாலனாவைக் கொடுத்த அதிசயம் நிகழ்ந்ததுண்டு.
இப்போது சாட்டிலைட் டிவிக்களில், தினமும் இன்றைய ராசி பலன் கூறினாலும், அதில் முன்பு இருந்த ஒரு திரில் இருப்பதாகத் தோன்றவில்லை. இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் மூன்று, ராசியான நிறம் பச்சை, ராசியான திசை வடமேற்கு என்று அடுக்கிக் கொண்டே போதும்போது, எத்தனை விஷயங்களை சரி பார்ப்பது ? தென்மேற்கு திசையில் அலுவலகம் இருக்கும்போது, வடமேற்கு திசைக்கு சென்றால் வேலை என்ன ஆகும் என்பன போன்ற அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளைத் தவிர்த்துப் பார்த்தாலும் எத்தனை விஷயங்களை நினைவில் கொள்வது ? தினசரியிலோ, நாட்கட்டியிலோ அன்றைய ராசி பலன் என்ன என்பது ரத்தினச் சுருக்கமாக இருக்கும்.
எது எப்படியோ, ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி மனதை அரிக்கின்றது .
சனிப் பெயர்ச்சி சனிக் கிழமைகளில் தான் வருமா ?

குட் நைட்.

Comments

Popular posts from this blog

India lost the second test by 122 runs to Steve Bucknor & Benson

Pongalo Pongal...

Indha Naal Inia Naal