மனநிலை ..
எதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து யோசித்து யோசித்து ரெண்டு வாரங்களை நகர்த்தி விட்டேன்.. இனிமேலும் எதுவும் எழுத வில்லை என்றால் அது தமிழினத்திற்கு நான் செய்கின்ற பெரிய துரோகமாக இருக்கும் என்று தோன்றியது.
தமிழினத்திற்கு பெரிய துரோகம் என்று நினைத்த போது, இலங்கை ஈழம் நினைவுக்கு வராமல் இல்லை.. அமைதியையும், அகிம்சையையும் போதித்த பௌத்த மதத்தை , மதிக்கும் பெரும்பான்மை மக்கள் வாழும் இலங்கையில் , சில காலங்களுக்கு முன்பு வரை , தினமும் , நூற்றுகனக்கானவர்கள் செத்து மடியும் செய்தி கேட்டு கேட்டுப் பழகி இருந்த காதுகளுக்கு இப்போது அப்படிப்பட்ட செய்திகள் வருவதில்லை என்பதை நினைத்து மகிழ்வதா.. இல்லை, தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில், பல லட்சக்கணக்கான பொதுமக்களையும் பலி கொண்ட அந்த சோக வரலாற்றை நினைத்து வருத்தபடுவதா.. அல்லது, அந்த நேரத்தில், தமிழை மிக அழகாக போற்றியும், பேசிகொண்டிருந்த சகோதர சகோதரிகள் உயிர் துறக்கும் நேரம், கையாலாகாத தலைவர்கள், டெல்லிக்கு கடிதம் எழுதி பொழுதை கடத்தி கொண்டிருந்த மான்பை எண்ணி வேதனை படுவதா என்ற , ஒரு விதமான புரிந்தும் புரியாத , உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொண்டும், ஏற்றுகொள்ள விரும்பாத மன நிலையில் உழலும் போது, இப்படிப்பட்ட தீங்கினை, அனுபவித்து, உற்றாரை, உறவினோரை, பெற்றோரை, புதல்வரை, இவர்களில், யாரோ ஒருவரையோ, அல்லது, அனைவரையுமோ, இழந்து தவித்து, அரசியல் பிழைத்தோரை நம்பி, மேலும், சொல்லெனா துயரை அனுபவித்த, சகோதர சகோதரிகளினுடைய, மனநிலை, எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க
மன திடம் எனக்கு இல்லை..
மனநிலையை பற்றி யோசித்த போது, கடிதம் மூலமாகவே, பொது மக்களுடைய பிரச்சனைகளையும், டெல்லிக்கு நேரில் , சென்று , தன் மக்களுடைய பிரச்சனைகளையும், சரி செய்யும், பேர் பெற்ற தலைவரின் தற்போதய மனநிலை பற்றிய சிந்தனை, வராமல் இருப்பதற்கு இல்லை... பொது வாழ்வில் வரும் மென் மனம் கொண்டோர்கள் , பின்பற்றகூடாத வழிமுறைகளைப் பற்றிய படிப்பினைகள் நினைவிற்கு வந்து போகாமல் இல்லை.. தாயோ, உடனிருந்தோரோ , செய்த தவறுகளினால், தனியாக சில காலம், வளர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் சிறுவனைப் பற்றிய "கனி"வான எண்ணம் நினைவில் வந்து மோதாமல் இருக்குமா ?..
ஜப்பானை புரட்டி அடித்த சுனாமி அலைகள், இந்திய கடற்கரைகளில் மோதாமல் இருந்தாலும், மக்கள் மனநிலை சுனாமி அலைகளாக, தேர்தல் முடிவுகளை தமிழகத்திற்கு வழங்கிய மாற்றத்தினை மறக்க முடியுமா... நாம் மறந்தாலும் தற்போது ஆட்சிக்கு வந்த பாக்கியவான்கள் மறக்கக் கூடாத சுனாமி அலை அல்லவா அது..
சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து சரியான ஆட்களை தம்முடைய பிரதிநிதியாகத் தேர்வு செய்து அனுப்பிய தமிழக மக்களுடைய மனநிலை மான்புடையது.
இப்படி பல்வேறு மனநிலைகளைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்த போது, இன்று ஞாயிறு , நாளை திங்கள் என்கிற உண்மை வந்து உணர்த்த, " ஐயகோ..நாளை முதல் அடுத்த ஐந்து நாட்கள், அலுவலகத்தில் உழல வேண்டுமே.. " என்கிற எண்ணம் வந்து, மனநிலை சற்று பிழற ஆரம்பித்தது..
Comments
Post a Comment