படிக்கலாமா...
....ரொம்ப நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்றால் படிக்கவும் வேண்டும் அல்லவா... ?
படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் என்னிடம் உள்ளன. அவையெல்லாம் கடமைக்காக. அப்பாவின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து பணம் கட்டிய பட்ட மேற்ப்படிப்புக்காக, வந்த புத்தகங்கள். சில புத்தகங்களை இன்னமும் திறக்கக் கூட இல்லை.
கல்லூரி காலத்தே, கவிஞனாகவும், கலையார்வம் நிரம்பியும் கலகலவென நண்பர்கள் சூழவும் இருந்து களித்த நினைவு வந்தது. அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை, ப்ரசுரிக்க எந்த பத்திரிக்கையும் விரும்பாது என்ற நம்பிக்கையால் , எப்போதும் பத்திரிக்கைக்கு எதையும் அனுப்பி வைத்தது இல்லை... சந்தா உட்பட !!..
அவ்வப்போது நூலகங்களில் படிப்பதோடு சரி..படிக்க சில இடங்கள் சில நேரங்களில் செளகரியமானவை. பொழுது போக்க வேண்டி நூலகம் சென்று , வருகிற அத்தனை பத்திரிக்கையையும் படித்துமுடித்து விட்டு பின்பு மீண்டும் நேரம் மிச்சமிருக்க அருகிலிருக்கிற தேனீர் கடையில் சுடசுட எண்ணை வாசமடிக்கும் பஜ்ஜியை உப்பும் உரைப்பும் சற்று தூக்கலாக இருக்கும் தேங்காய் (வெள்ளையாய் இருப்பதனால் !!) சட்னியில் நனைத்து கடித்து சுவைத்து, “விபச்சார அழகிகள் கைது” , “நூதன முறையில் திருட்டு”, என்பன போன்ற செய்திகளையும், சிந்துபாத் படக்கதையையும் படித்து விட்டு அருகிலிருக்கின்ற புத்தகக் கடையில் தொங்கும் புதிய புத்தகஙளின் வண்ண வண்ண அட்டைகளைப் பார்த்து, பெரிய எழுத்துக்களுடன் தொங்கும் செய்தித் தாளின் சுருக்கத்தினையும் படிக்கும் நேரத்தில், வீடு செல்ல வேன்டிய பேருந்து வந்து, அதில் ஏறி அமர்ந்தால், நடத்துனர் கொடுத்த பயணச் சீட்டினில் அச்சிடப்பட்டிருக்கின்ற எழுத்துக்களைப் படித்து முடித்தால் அருகில் வந்து அமரும் கிராமத்தில் அரசியல் பேச ஞானம் பெற, வெளி வருகிற அரசியல் பத்திரிக்கைகளில் பாதியை அள்ளி வந்திருக்கின்ற அன்பரிடமிருந்து இரு புத்தகங்களை இரவல் வாங்கி படித்து முடிக்க, இறங்க வேன்டிய இடம் வர நன்றி சொல்லி, பல உலக விஷயங்களைப் படித்து முடித்த மன நிறைவுடன் வீடு வந்து சேரும் பொழுது.....
புத்தக அலமாரியில் இருக்கின்ற படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும்...
நமக்கு நேரம் இருந்தால் தானே !!! மாலை செய்தி படிக்க நேரமாகி விட்டிருக்கும்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்றைய தலைவலி --
மீண்டும் ஒரு முறை எனது-- எட்டு மாத மகளை ஒரு திரைப்படம் பார்க்க அழைத்து சென்றோம். அவள் அமைதியாக படம் முழுக்க எங்களை பார்க்க விட்டாலும், படம் எங்களை பாடாய் படுத்தியது. படம் The Final Destination... கொஞ்சம் போர் , நிறைய தலைவலி, கொஞ்சம் பயம், கொஞ்சம் அருவருப்பு. அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பார்க்கின்ற படி அமைந்தாலும் , எடிட்டிங் மற்றும் திரைக்கதை, ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தது.
படம் முடிந்து வெளியே வந்த பொழுது , ஒவ்வொரு அடியினையும் மிகவும் எச்சரிக்கையாக எடுத்து வைக்க வேண்டி இருந்தது. ஒரு சிறிய ஆட்டோ கடந்து சென்றாலும், பயந்து நாலு அடி தள்ளி ஒதுங்கி செல்லும் நிலை உண்டானது.
டி வி டி இல் படத்தை பார்க்கவும்.
Comments
Post a Comment